Skip to main content

இருளர் பாடல் 2 - தெக்கு மலெ கல்லூருட்டி - சப்பெ கொகாலு


சுல்தான்களின் பேச்சடங்கிவிட்டது எங்கு பார்த்தாலும்  துரைகளின் நடமாட்டம். துடிய பாட்டன் ஆண்ட,  அத்திக் காடுகளும் ஈட்டிமரங்களும்  தேக்குமரங்களும் சூழ்ந்த, காட்டெருமைகளும், கழுதைப்புலிகளின் கத்தலும் கேட்டுக் கொண்டேயிருந்த துடியனூர், இப்போது கால்மேலாய் மாறிப் போயிருந்தது.  பதிக்குப் பக்கத்தில்  நிறைய புதிய ஆட்கள் வந்து ஏற்கனவே காடழித்திருந்த இடத்தில்  விவசாயம் செய்யத் துவங்கியிருந்தனர்.  அதில் செம்பூத்தானும் ஒருவன்.
 சாமையும், ராகியும், நல்ல விளைச்சலை அள்ளித் தருகிற இன்னொரு தோட்டமும்  ஆனைகட்டிக்கு கீழே  சோமையனூரில் செம்பூத்தானுக்கு இருந்தது. அதில் அவனின் முதல் மனைவி குப்பாத்தாள் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலை அதிகமாக இருக்கும்போது  இங்கிருந்து வெள்ளன், கொட்டன், காரமடை, இன்னும் சிலரை வண்டியில்  கூட்டிப்போவான் செம்பூத்தான்..ஒருவாரம் பிழிந்தெடுத்துவிட்டு திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவான். அவர்கள் திரும்பி வரும்போது ராகியோ, கம்போ, சோளமோ ஆளுக்கு மூன்றுபடி கொடுத்துவிடுவான்.

இப்போது காரமடைக்கும் முடியாமல் போய்விட்டது. ஊஞ்ச குல மொக்கைக்கு ஓடிவிட்ட வெள்ளனை இனி எளிதில் பிடித்துவிடமுடியாது. பன்றி முட்டியதில் கொட்டன் காலுடைந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வழியில்லை, செம்பூத்தானிடம் வாங்கிய விதைக் கடனை கழிக்க யாராவது சம்பந்தப்பட்ட குடும்பத்திலிருந்து போயாக வேண்டும்.

செம்பூத்தான் 'ஒத்தை'க்காலில் நின்றான்.
                               ***
 வடக்கு மலைக்கு பொறுப்பாக இருந்தான் கார்டன் துரை, கார்டன் துரையின் உண்மையான பெயரெல்லாம் யாருக்கும் தெரியாது, சில பேர் அவனை காட்டன் துரை என்றுகூட அழைத்தார்கள் அவனுக்கும் இந்தப் பேருக்கும் எந்த சம்பந்தமுமில்லை மக்களைப்பொறுத்தவரை அது ஒரு அடையாளம் அவ்வளவே. அவன்   தன்சட்டத்துக்கு அடங்காத வேப்ப மரத்தூர்காரர்களையும், வனத்துக்குள் துரையோடு ஒத்துழைக்காத சேமன் பதிக்காரர்களையும்    பிடித்துவந்து,  ஏழெருமைப் பள்ளத்தில் பாலம்கட்ட விட்டிருந்தான். கல்லை சுமப்பதும்  பாறையை உடைப்பதும்.. கலவையை கலக்குவதும் இரும்பை இறக்குவதும்...  அவர்கள் இதுவரை அனுபவித்திராத கடுமையில் சிக்கி திக்குமுக்காடிக்கொண்டிருந்தனர்.

சொந்த விவசாயம் போக செம்பூத்தான், முக்கியமாக இந்த வேலைகளுக்காக ஓடிக்கொண்டிருந்தான்.  மண்ணடிப்பதற்காகவும்  மலையிலிருந்து கல்லெடுப்பதற்காகவும்  துரைகளின் கட்டளைக்கு அவ்வப்போது அவனது வண்டி  கீழ்படிந்திருந்தது. மலைகளில் இவன் நடத்தும் சில நீக்குபோக்குகளுக்கு அது உதவியாக இருக்கும் என்பதாலும் துரைகள் என்பதாலும்  செம்பூத்தான் இந்த வேலையை, மனமுவக்காமல் ஏற்றுக்கொண்டிருந்தான்.
                                     ***
செம்பூத்தானுக்கு இன்னும் கால் வலிக்கவில்லை

தன் அப்பன் கொட்டனும், காரமடையும் போகமுடியாது என்ற நிலை வந்துவிட்டது வரலி காரமடைக்கு பதிலாகவும், சொடங்கன் அப்பனுக்கு பதிலாகவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேண்டா வெறுப்பாக வண்டியில் ஏறினார்கள்.
வண்டி ஆடி ஆடி பள்ளத்தில் இறங்கி மேடேறி சோமையனூரை நோக்கி போய்க்கொண்டிருந்தது
கூட வந்த சொடங்கன் வரலி மேல் ஆசை வைத்திருந்தான். அவளுக்கும் அவனை தினமும் சீண்டாமல் தூக்கம் வருவதில்லை. வரலி குப்பிலிகா குலத்துக்காரி,; சொடங்கன் ஆறுமூப்பு குலத்துக்காரன். கட்டிக்கொள்கிற முறைவேறு, போதாக்குறைக்கு இரண்டு பேருக்கும் ஒரே வயது.

அவர்கள் காதலில் திளைத்துக்கொண்டே இருக்கலாம்தான்!

ஆனால் செம்பூத்தான் தோட்டத்தில்  களை வெட்டவும் சாமையறுக்கவும் சாணி வழிக்கவும் மாடுகளுக்குத் தீனிபோடவும் புல் அறுக்கவும் என வேலை மிகவும் கடுமையாக இருந்து கொண்டேயிருந்தது.    இப்படியெல்லாம், தங்கள் சொந்தக் காட்டில்கூட, அவர்கள் நிற்காமல் வேலை செய்தது இல்லை.  “நிந்தா குத்தோ, பேசுந்தா குத்தோ”,   கூலி கொடுக்கும்போது பெணாங்கிக் கொண்டே சாமையில் இரண்டு படி குறைத்துக் கொண்டுதான் தருவார்கள்.  

“ஒரு சொப்பு போடுகாக்கு முடிகாலெ சுண்ணாம்ப தடாவாக்கு முடிகால  முடிஞ்சுவெச்ச கொட்டையை மெள்ள முடிகாலெ” மனது வெந்து உழைத்தார்கள்.
பத்தாக்குறைக்கு கல்மண் அடிக்க வேறு அடிக்கடி செம்பூத்தானோடு போக வேண்டியிருந்தது.
                                ***
பவளன் செம்பூத்தானின் ஒரே வாரிசு. வாலிப முறுக்கில் இருந்தான். வார் செருப்பை மாட்டி,  மீசையத் தடவி நின்றுகொண்டு தின்றுவிடுவதுபோல் வரலியையே பார்ப்பதும் சாடையாக பேசுவதும் சொடங்கனுக்கு  எரிச்சலாய்  இருந்தது. மனசுக்குள் வெசா வந்து கொண்டே இருந்தது.


 கீழுர்காரி  துளசியும், செம்பூத்தான் தோட்டத்தில் கூடமாட வேலை செய்துவந்தாள் குப்பாத்தாள் வேண்டாமென்று ஒதுக்கும் கிழிந்தசேலைகளை கட்டிக்கொண்டு மினிக்கி திரிவதும் சொடங்கனை உரசுவதும்...
 வேறெதுவும் நடந்துவிடவில்லையென்றாலும் வரலி மேல் சொடங்கனுக்கும், சொடங்கன் மேல் வரலிக்கும் அவ்வப்போது இது குறித்து உள்ளூர புகைச்சல் இருந்து கொண்டேதான் இருந்தது.
                      
***

ஒரு நாள் அதிகாலையில்  குப்பாள் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருந்தாள். முகம் வீங்கிக் கிடந்தது. சேலைத்தலைப்பைக்கொண்டு கண்களை துடைப்பதும் மீண்டும் அழுவதுமாக இருந்தாள் “குடியானவ ஒருத்தி இவனுக்கு கெடைக்கலாயா... அப்படியே அரசல் புரசலா இருந்துகிட்டு இங்கயே கெடக்க வேண்டியதுதானெ..” நகாடியை சிந்தி தூணில் துடைத்துவிட்டு மறுபடியும்  மறுபடியும் அழுதுகொண்டிருந்தாள்.  அரிதாக நடந்த இந்த சம்பவம் ஊர் முழுக்கப் புகை கிளப்பியது. அக்கம் பக்கத்துக்காரர்கள் அடிக்கடி வந்து அவளிடம்  துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

குப்பாத்தாள் சொன்னபடியே பவளனை எங்கேயும் காணவில்லை.

உறவினர்கள் தேடாத இடங்களில்லை கேட்காத ஆளில்லை போகாத ஊரில்லை 
                                       ***
இனி இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூட கூடாது என்ற முடிவோடு சொடங்கன் பந்திமடை வழியாக வீருபந்தியில் விழுந்து மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

வரலி...!?

வரலி  அவனுக்காக மாங்கரையில் காத்திருந்தாள்
                                      ***


இஞ்சிப்புல் - கோரைப்புல்   சாமெ - சாமை,  குயல் - குயில் ஊஞ்சகுல மொக்கே - யாரும் எளிதில் வரமுடியாத அடர்ந்தசோலைக்குள் இருக்கும் ஒருபகுதி, வெசா- கோபம் பெணாங்குதல் -  திட்டுதல், நகாடி- சளி  

ஊர் மூப்பன்- இருளர் பதியின் முக்கியமான தலைமைப் பொறுப்பு இது  பதியில் நடக்கின்ற பஞ்சாயத்துகளில் தலைமை பொறுப்பேற்று நடத்துவது.  பிரச்சனைகளில் தலையிட்டு முறையான தீர்ப்பு வழங்குதல். ஜோடிகள் ஓடிப்போய் திரும்பி வரும்போது  தகுந்த நடவடிக்கைகள் எடுத்து அவர்களை குடும்பமாக அங்கீகரிப்பது,  திருமணத்தை  முன்னின்று நடத்துதல் , இறப்புகளில் நடக்கின்ற சடங்குகள் முடியும் வரை கூடவே இருப்பது, வெளிவட்டாரங்களுக்கும் ஊருக்கும் ஒரு இணைப்பு பாலமாய் செயல்படுவது.

வண்டாரி - மூப்பனின் வலது கரமாக செயல்படுகிறவன், இறப்புச் செய்திகளை அனைத்துப் பதிகளுக்கும் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு  வாண்டாரியுனுடையது. ஊர் எல்லையில் நின்றுகொண்டு அவர்கள் கொண்டுவரும்.

குறுதலை - மூப்பனுக்கு அடுத்த பொறுப்பு இது. குறுதலை ஒரு தகவல் சொல்லியாக செயல்படுகிறவன்.
கல்யாணம் நடந்தால் அந்த வீட்டை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு சமையலுக்கு தேவையானவற்றை கொண்டு வந்து சேர்க்கிறவன். அதுபோக மூப்பன் சொல்லும் காரியங்களை கச்சிதமாகச் செய்து முடித்துக் கொடுக்க வேண்டிய பணி இவனுடையது.. கல்யாணச் செய்தியை எல்லோரிடமும் தெரிவிப்பது. கல்யாணத்துக்கு ஏழுகுலங்கள் உட்கார்ந்து சடங்கு செய்ய பாய்விரிப்பது, கல்யாணச் சடங்குகளுக்கான பொருட்களைக் கொடுப்பது போன்ற முக்கியமான பணிகளைச் செய்கிறவன்.

செம்பூத்துப் பறவை குறுக்கே போனால் நல்ல சகுனமல்ல என்கிற நம்பிக்கை இருளர்களிடத்தில் காணப்படுகிறது

செம்பூத்தான் என்ற குலம் கொங்கு வேளாளர்களின் உட்பிரிவுகளிள் ஒன்று  

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக