Skip to main content

இருளர் பாடல் 1 - காகே டாகே பங்கித்தாலேன்னெ - சப்பெ கொகாலு


காடுகளுக்குள் நெளிந்து வளைந்து பாதைகள் மன்னர்காடு போய்க்கொண்டிருக்கிறது.இந்தவளம்கொழிக்கும்சோலை,மழைக்காடுகளின்ஒன்று.தாணிக்காயும்சாதிக்காயும்பூசைக்காயும்அள்ளஅள்ளத்தீராதஅளவில்விளைந்துகொண்டேஇருக்கும்.சீவேப்புல்லும் புளியும் ஒருவருடம் விட்டு ஒருவருடம் பூத்துக் குலுங்கும், விதவிதமான புசுகிகள் மலைவிட்டு மலை தாவிக்கொண்டிருக்கும்.  கீழே கால்வைத்தால் அட்டையில்லாமல் யாரும் நகரமுடியாது..எப்போதும் ஈரக்காற்றும் சாரலும் வீசிக்கொண்டே இருக்கும்.  

இதைத்தான் கொங்கன்  சுப்பன் ஏலமெடுத்திருக்கிறான். ஏலமென்றால் ஒன்றுமில்லை. யாரும் அவரை எதிர்த்து ஏலம் கேட்க வரமாட்டார்கள்.  அவனுக்கே உரிமையை கொடுத்துவிடுவார்கள். ஏலத்துக்கான  பொருள் அவனது அகராதியில் இப்படித்தானிருக்கிறது.ஒருவருடம் எட்டு வருடமல்ல கலங்காலமாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. 

 ஒரு பீட்டுக்கு ஒரு கார்டர் வீதம் ஆறு பீட்டுக்கும் ஆட்கள் இருந்தனர். இரண்டு பீட்டுக்கு ஒரு பாரஸ்டர் வீதம் மூன்று பாரஸ்டர்கள் இருந்தனர். மூன்று பாரஸ்டர்களுக்கும் மேல்.ஒரு ரேஞ்சர்.. கோயமுத்தூரில் ஆறு ரேஞ். அந்த ஆறு ரேஞ்சுக்கும் மேலே டி.எப். ஓ இருந்தார். டி எப் ஓவுக்கும் மேலே சுப்பன் இருந்தான்.‘டி எப் ஓ’ வந்தால் எழுந்து கும்பிடுகிறார்களோ, இல்லையோ, சுப்பன் வந்தால்.. பவ்யமாய் வாய் பொத்தி சல்யூட் அடித்து விறைத்து நிற்பார்கள்.

ஆஜானுபாகுவான உயரம், கொஞ்சம் கவிழ்த்து முறுக்கி விடப்பட்ட மீசை,   அண்டர்வேருக்கும் மேலே எப்போதும் தூக்கிக் கட்டியிருக்கும் வேட்டி, பழுத்து பளபளக்கும்முகம். கழுத்தில் தொங்கும் துண்டு.  இப்படி யாரையாவது பார்த்தால் நிச்சயம் அது சுப்பன் என்று சொல்லிவிடுமளவுக்கு எங்கும் அறிமுகமாயிருந்தான்..கீழ்நாட்டிலிருந்து பஞ்சம் பொழைக்க கட்டைவண்டி கட்டி மேலே வந்தவன்....  இப்போது கர்ணமகா பிரபாக ஆகியிருந்தான்.

இடது பாக்கட்டுக்குள் கையைவிட்டால்.. வருவதைக் கொடுத்துவிடுவான். அஞ்சோ, பத்தோ... வருவதைக் கொடுத்துவிடுவான். அவ்வளவுதான் வரும். அதற்காகவே சில்லறைகளைச் செய்து வைத்திருப்பான்.. 

இப்போது அவனுக்குச் சொந்தமாக லாரி இருந்தது.

அதிகாரிகளைக் கண்டால், கை, வலது பாக்கெட்டுக்கு போய்விடும். அங்கே 20 50 என்று ருபாய்கள் கட்டப்பட்டு இருக்கும்.
 
சீவப்புல்களுக்குள் மறைக்கப்பட்டு  செம்மரமும்  ஈட்டிமரமும் தாராளமாகப் போகும். சுப்பன் வண்டியென்றால் யாரும் நிறுத்த மாட்டார்கள். நிறுத்தும் தைரியமும் யாருக்கும் இல்லை. அப்படி நிறுத்தியவர்கள் கதை என்னானது என்று அந்த செக்போஸ்ட் தடுப்புமரங்களிடம் கேட்டால்கூட சொல்லிவிடும்.

இப்போது    லாரிகளும் சூளைகளும்  அவனுக்கென்று இருந்தன.. 

எல்லா சரகமும் அவனுக்கு அத்துபடி. ஒவ்வொரு பீட்டிலும் வாட்சர்களுக்கு வாட்சர்களை வைத்திருந்தான்.  அவ்வப்போது அவர்களுக்கு கள்ளும் சாராயமும் இஷ்டம் போல் கொடுத்துவிட்டுப் போவான்.  எல்லா ஊர்களிலும் அவனுக்கென்று பொம்பளயாள் இருக்கும். அவர்களுக்கு இவன் சகலமும் கொடுப்பான்; அவர்களும்தான்.

அப்படித்தான் தச்சம்பாடியிலிருந்து  சூட்டறைக்கு  மாப்பிள்ளை சேர வந்திருந்த மருதியையும் நினைத்து சீண்ட ஆரம்பித்தான். 
                                              ***
 சுப்பன் இப்போது சாளையிலிருந்தான்

சுப்பன் கட்டியிருந்த சாளை,  ஆட்டுப்பாறைக்கு மேற்கே தள்ளியிருந்தது. வரும்போது இளைப்பாறவும், வன சேகரத்தைக்  கொட்டிவைக்கவும், அவனாக முன் நின்று ஆட்களை வைத்து, சுகை போல கொஞ்சம் வசதியாக கட்டியிருந்தான்.

லேசாக மழை பெய்ய ஆரம்பித்தது.  ஆட்டுப்பாறையைச் சேர்ந்த நான்கு பதியன்கள் தானிக்காய்களைக் கூட்டி ஒதுக்கி மூட்டையாய்க் கட்டி  சுமந்துபோய் உள்ளே  வைத்துக்கொண்டிருந்தார்கள்.

மருதி தானிக்கொட்டைகளை தரம் பிரித்து  பொறுக்கிக் கொண்டிருந்தாள்..

‘ம்ம்க்குக்க்கு’ சுப்பன் கணைத்தான் 

கொங்கனின் கணைப்பு மட்டும்மல்ல அத்தனை சங்கேத மொழிகளும்  அவர்களுக்குத் அத்துபடி, வேலை செய்துகொண்டிருந்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்.
மெல்லமாய் நெங்கி வந்து அவள் மேல் கையை வைத்தான் கையை வைத்ததும்  திமிறி எழுந்த மருதி 

“என்னாதுக்கு கொங்க இச்சா செய்கெ” கேட்டுவிட்டு வெளியே போக எத்தனித்தாள்

“ஊரு உலகத்துல இல்லாததா வா புள்ளே” கையைப் பிடித்து சாதிக்காய் கொட்டிவைத்திருந்த சாளைக்கு இழுத்தான். முரண்டு பிடித்தாலும் மருதி ‘களுக்’ கென்று சிரித்தாள். அவள் சம்மதித்து விட்டாள் என்றுதான் நினைத்தான். முகம் சிவந்து நின்றான்.

“எனக்குந்து குண்ணான் கெடக்கான். நீவிரு ஆரு?” 

இப்போது சுப்பன் சிரித்தான்.

வலப்புறத்தில் இருந்த பட்டிஅணடர்வேரின் பைக்குள் கையைவிட்டு காசை மூட்டையின் மேல் எடுத்துப்போட்டான்.

“என்னாது...,ஓ காசா... இதெனத்துக்கு”.

“வேறென்ன வேணும் புள்ளே, கேளூ” குழைந்தான். கேட்காமலிருப்பாளா?

“ஏலம் எடுத்திருக்கிற சுண்ட கொல பீட்டுக்கோ நாந்தா இனி மேஸ்திரி.”

“இவ்வளவுதானா?” சுப்பன் புன்னகைத்தான்.

 இதை அவன்  நக்கலாக சொன்னானா உண்மையாகவே சொன்னானா என்று அனுமானம் செய்ய முடியவில்லை. 

“ கடுகுமனே பீட்டே இனி  நாந்தே  பாப்பினா” மருதி விடுவதாயில்லை.

“வெச்சுக்க புள்ள” தாராளமானான்.

“தாணிக்கய் விளையும் வெள்ளகுல பீட்டும் வேணு”

எல்லாவற்றுக்கும் ம் ம் னே சொல்லிக்கொண்டுவந்தவனை ஒரு கட்டத்தில் நிறுத்தினாள் மருதி  .

“இதெல்லா நிம்த்து சொத்தா கொங்கா? நீவீரு கொடுத்து.. நேமு எடுக்காக்கூ, ...காடே எம்த்துது”

“இதை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை  பேச்சே காணோம்
 அமைதி அவளுக்கு சங்கடமாக இருந்தது மீண்டும் மருதியே கேட்டாள்

“நீவீரு மட்டூ காரமடே  பங்களாத்த லெதி வெச்சருகேந்து சொல்லு, குண்ணான விட்டுகிந்து நித்து கூரேக்கெ வந்துருகெ”

சுப்பன் இருளச்சிகளுக்கு என்ன செய்யவேண்டும் என்று ஒரு அளவு வைத்திருந்தான் இது அவன் வைத்திருந்த அளவுகோலைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது அதிர்சியில் உறைந்தவன் ச்கஜநிலைக்கு திரும்பி  கோபத்தோடு  வண்டியை கிளப்பிப்போனவன்; போனவந்தான் அதற்குப் பிறகு வரவே இல்லை 
                                        ***

குண்ணான் காட்டுக்குள்ளிருந்து வேட்டி நிறைய டாகுகளை பிடுங்கி மூட்டைகட்டிக்கொண்டு வந்தான். மருதி அவனுக்காகவே மாவு குய்யி தக்கில் பெரிய மூட்டையோடு காத்திருந்தாள். அதில்  விதவிதமான டாகுகள் இருந்தன.. டாகு பொறிப்பது என்பது அவர்களுக்கு ஒரு சாக்குதான்  
ஆடுகள் ஒன்றையொன்று முந்தியபடி காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தன..ஆடோட்டி திரும்பிப் பார்த்தான்.திரும்பிப்பார்த்தவன் சும்ம இல்லாமல்  

“ஏய் மருதி,  என்ன பண்ணிக்கொண்டிருக்கே. இச்சா நின்னு”

“ம் டாகு... தம்மாமே கேட்டினானுந்து பொறித்தே. குண்னானுக்கு வேணுமிந்து கேட்டின
அதா பங்கித் தந்து கொண்டிருக்கே; நிமுக்கூ வேணூந்தா கொடுக்கெ” ராகமாய் இழுத்தாள்

நேரம் போவது தெரியாமல் சிரித்தும் களித்தும்  பேசிக்கொண்டே இருந்தனர்.  

வேட்டைக்குப் போன ரங்கனும் கள்ளனும் மசாலின் காதுகளை பிடித்தபடி கத்தாரியை தோளில் போட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தனர்.

“ஏய்ய்ய் லாமி,   கூக்கே மகேதேனெ நீவீரு.   என்னாதுவெ பண்ணுகினா”







“பாலடாக அத்திகே கேட்டாந்து பொரித்தெ. குண்னான் அக்க கேட்டாந்து பங்கித் தந்து கொண்டிருக்கினெ”

மகரந்தம் ததும்பிய நீரில் பட்டாம்பூச்சிகள் பூத்துக்கிடந்தன. ,தும்பிகள் பின்னியபடி பறந்துபோயின. சிட்டிருக் சிட்டிருக் என்று சிட்டுகள் செடிகளில் கிடந்தது  அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்தும் பிடித்தும் ஆடிக்கொண்டிருந்தனர்..

விறகு பொறுக்க போகிறவர்கள் கொடுவேனை ஆட்டி ஆட்டி நடந்துபோனார்கள். அவர்களுடைய நாய் கூடவே வாலை நிமிர்த்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தது. 

“வெள்ளக பொண்றி.. குதித்து குதித்து காலு லொடகா போகு, ஆமா.. ஆடா மேக்காக்கா வந்தே?”

“இல்லெ, அக்க , சீங்கே டாகு வேணுந்து கேட்டா.   அப்புறம் கூக்கேனோட கோக்கொட கேட்டினா. அதான் பங்கித்தந்துகொண்டிருக்கெ”

“ஹேய்.” ரங்கன் சிரித்தனா பேசினானா என்று தெரியவில்லை  கடந்துபோய்விட்டான்.

தட்டையாக சீவப்பட்டிருந்த ஆத்திமரக்கட்டையை அருகில் கிடந்த கல்லில் சாய்த்து வைத்து வெளிங்கப் பொடியைப் போட்டு குண்ணான் மெழுகைத் தீட்டிக்கொண்டிருந்தான். 

மாடுகள் பதி நோக்கி திரும்பிக்கொண்டிருந்தன.

“அக்க... இன்னூ பங்கித் தந்து கொண்டிருக்கெ. ரெண்டாளூ காட்டையா பங்கிக்கொண்டிருக்கினா. என்னிக்கு முடிப்பின” யாரோ இரண்டுபேர் நக்கலடித்துப்போனார்கள் 

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருவரும்  திரும்பத்தொடங்கினர்
                      
                                                                  ***

                         காரமடை பங்களா களேபாரத்திலிருந்தது!!!..... 



டாகு - கீரை , முன்னே டாகு - முன்னை கீரை பாலெ டாகு - பாலைக்கீரை ,காகே டாக்கு - சீங்கை கீரை 



         

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக