Skip to main content

சித்திராக்களும் மாரிகளும்

கோவையிலிருந்து வெகு தொலைவுதள்ளி அடர்வனங்களுக்குள்ளிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தோம் .

சிண்டிகேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் பார்த்திபன் குழந்தைகளுக்கான சீருடைகளை ஏற்பாடு செய்திருந்தார்
அவரே நேரடியாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து எடுத்துக்கொண்டுவந்திருந்தார்.

'நானும் உங்களோடு பைக்கிலேயே வந்துடறேன் சார்' கூடவே அமர்ந்துகொண்டு மொத்தமாக 80 கிலோமீட்டரை இருசக்கரவாகனத்திலேயே கடந்துவந்தார்.

குண்டும் குழியும், யானைப்பிளிறலும் நிறைந்த சாலையில் எந்த இடத்திலும் அவரிடத்தில் சலிப்பையோ களைப்பையோ காணமுடியவில்லை.

வரும்வழியெல்லாம் மலைப்பகுதிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.. தனது தந்தை தொடக்கப்பள்ளி ஆசிரியாக இருந்ததை ஓரிரு இடங்களில் குறிப்பிட்டார்.

11.40 க்கு பள்ளிக்கு போய்விட்டோம். காட்டில்கிடைத்த பூக்களைதொடுத்து ஒரு பொக்கேபோலாக்கிக்கொடுத்து குழந்தைகள் வரவேற்றார்கள்
வாஞ்சையுடன் அதைவாங்கிக்கொண்டார்

'நோ..பார்மாலிட்டி' சொல்லிவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் ஒவ்வொருவராய் அழைத்து சீருடையைக் கொடுத்தார்

அநேகமாக இது அவரது தந்தையின் நினைவாக செய்திருக்கூடும் என அனுமானிக்கிறேன்

நிகழ்வு முடிந்ததும் பெயரையோ முகத்தையோ பதிவு செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். ஆனாலும் நான் தற்காலிகமாக பார்த்திபன் என்று பெயர்சூட்டிக்கொண்டேன்

ஈரோட்டைச்சேர்ந்த திரு சண்முகம் ராமசாமி, ஆதிவாசிகுழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் குறித்த பதிவுகளை பார்த்து திரு பார்த்திபன் அவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.

அவருக்கும் திரு பார்த்திபனுக்கும் என் அன்பும் நன்றியும்

ஒரு வாரத்துக்கும் முன்பு சித்ராவுக்கு வாதம் என்று சிவகாமி தொலைபேசியில் அழைத்துசொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது
திரு பார்த்திபனை வழியனுப்பிட்டு சித்ராவைப்பார்க்க கரைமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றிருந்தேன்.

சித்ரா இருளர் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்

பல்வேறு பணிகளுக்காக வெளியே போகும்போது திண்டுக்கல்லை சேர்ந்த முருகனோடு பழக்கம் வந்திருக்கிறது அது காதலாக மாற திருமணம் செய்துகொண்டார்கள்

இப்போது 7 மாத பெண் குழந்தையொன்று கையிலிருக்கிறது.
ஆஸ்பத்திரி போய்ட்டு இப்பதா வர்கேமு’ சோகம்வழிந்த முகத்தை துடைத்துகொண்டே சேரை எடுத்துப்போட்டார் பத்ரன்

பெட்டில் ஒரு பொம்மைபோல் படுத்திருந்தாள் சித்ரா

இடது காலும் வலது கையும் வருவதில்லை குழந்தைக்கும் ஏதோ பிரச்சினை... இழுத்து இழுத்து மூச்சுவிடுகிறது.

எப்போதும் காட்டுக்கும்.ஊருக்கும் கால்களில் சக்கரத்தைக் கட்டிகொண்டு அலைந்த சித்ராவை இப்படிப்பார்ப்பது . வேதனையளித்தது.
கொஞ்சநேரம் ஆறுதலாக பேசிக்கொண்டிருந்தேன்

சிறப்பு மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக மருத்துகுறிப்புகளின் ஒருபிரதியை கையில் எடுத்துகொண்டு ’வர்ரேன் சித்ரா’ என்றபோது கைகளை எடுக்க முயற்சிசெய்தாள் ஆனால்..முடியாமல் தலையை இடதுபுறமாக அசைத்து விடைகொடுத்தார். கனத்த மனதுடன் படியிறங்கி வண்டியை.உதைத்தேன்

கொடிங்கரைப்பள்ளத்தில் மாரி மாடுகளை தண்ணிக்கு விட்டிருந்தாள்
.கிழக்கிலிருந்து மேடிறங்கி வருவதைவைத்து யூகித்திருப்பால்போல

ஓ நீவீரா…நல்லாருக்கினா.. சித்ராவ பாத்தே..

ஆமா

கூரேல ருந்தாளா..என்னாது சொல்லுகா...

ம் கூரேலதாம் ருக்கினா ஒந்துமில்லே சப்புந்து கெடக்கா

ஓ..பாவேந்தா.

சின்ன உரையாடலுக்குப்பின் .
கண்களைத்துடைத்துகொண்டாள்

மாரியும் இருளர்வகுப்பை சேர்ந்தவள்தான் பவானி ஆறு தொட்டுக்கொண்டோடும் ஒரு பதியை சேர்ந்தவள்
திருமணமாகி 4 வருடமாகிவிட்டிருந்த்து இன்னும் குழந்தை இல்லை

என்னாச்சு மாரி?

எங்க அவே வருகா..

ஆஸ்பத்ரிக்கி போலாம்பா... நாம ரெடியா நிப்போம், மலைக்குள் போயிருவா.. இருட்னாப்புல தண்ணிய போட்டுகிட்டு வருகா..நா ஒருத்தி என்னா பன்னுகாது
கணவனால் சிகிச்சை விட்டுவிட்டுப் போவதாக குற்றம்சாட்டி வருத்தப்பட்டாள்

செரி மாடு போகு..நே வர்கே.. நீவீரு ஊருக்கு வருவே..

இன்னைக்கு இல்லே

அடுத்தவாரம் வருகேன்

செரி..ஏய்ய்ய்ய்...ய்ய்..என்று ஒலிகூட்டி வலதுபுறம்சென்று காரிக்கன்றை ஒத்தையடிப்பாதைக்கு விரட்டிக்கொண்டே மேடேறிப்போயேவிட்டாள்
வருகிற வழியெல்லாம் சித்ராவும் மாரியும் அவர்கள் எழுப்பிய கேள்விகளும் நடத்திய உரையாடலும், பல்வேறுநினைவுகளையும் குறிப்புகளையும் சுழலவைத்தது

பள்ளிகளில் குழந்தைகளின் வரவை உறுதி செய்வது ,அரசுப்பள்ளிகளை மீட்டெடுப்பது, அதை தனியார் பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு இணையாய் மாற்றுவது, கொடையாளர்களை பள்ளியோடு இணைப்பது ஒரு முக்கியமான பணிதான்

ஆனால் இவற்றோடு பழங்குடிகளிடையே குழந்தைகள் பிறப்புவீதம் குறைந்திருப்பது குறித்த கவனமும் குழந்தைபேறு இல்லாமல்போவதும் குறித்த ஆய்வு முக்கியமானதும் கட்டாயமானதும் என நினைக்கிறேன்
பழங்குடிகளுக்கான இயக்கங்கள் இதுகுறித்து போதிய கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகிறேன்

நாங்கள் சென்ற பள்ளிக்கு அருகில் மூன்று பதிகள் இருக்கிறது. மூன்றுபதிகளில் வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை. 156 ஆனால் பள்ளியில் 20 குழந்தைகள்தான் படிக்கிறார்கள்
இடைநிற்றல் ஏதுமில்லை
ஒரு 20 குழந்தைகள்தான் மேல் நிலைப்பள்ளிக்காகவும் உயர்நிலைப்பள்ளிக்காகவும் வெளியே போய்வருகிறார்கள்

குழந்தை பேரின்மையை மருத்துவத்தில் இரண்டுவகையாக பிரித்திருக்கிறார்கள்

ஒன்று பிரைமரி இன்ஃபெர்டாலிட்டி

இன்னொன்று செகண்டரி இன்பெர்ட்டாலிட்டி

எந்தவிதமான கருத்தடைசாதனங்களும் உபயோகிக்காமல் திருமணமான ஒரு வருடம்வரைக்கும் கருத்தரிக்காமல் போனால் அது Primary infertility என்று மருத்துவ அகராதி சொல்கிறது

நான் அறிந்தவரையில் பிரைமரி இன்பெர்டிலிட்டிக்கான காரணங்கள் பழங்குடி ஆண்களிடம்தான் பரவலாகக்காணப்படுகிறது.
கடந்த 2013 ல் மெடிக்கல் அசோசியேசன் நடத்திய இன்பெர்ட்டிலிட்டி முகாம் ஒன்றில் கிட்டத்தட்ட40 க்கும் க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்துகொண்டார்கள்

தீவிரமான பரிசோதனைகளின் முடிவுகள் பிரச்சினை ஆண்களிடம் இருப்பதை உறுதி செய்தது

உணவுப்பழக்கங்களில் ஏற்பட்டிருக்கிற மாறுதலும் சரியான சிகிச்சைமுறையை மேற்கொள்ளாததும்
டாஸ்மாக்கையும் இங்கே male infertilityக்கு ஒரு காரணமாக சொல்லமுடியும்
மூலநோயும் சர்கரையும் இங்கே பரவலாகக்காணப்படுகிறது காற்றில் பெரும்பாலான மாதங்களில் ஈரப்பதமே இருப்பதில்லை உடல்வெப்பம் தாறுமாறாக ஏறி இறங்குகிறது இவையெல்லாம்சேர்ந்து male infertility ஏற்படுத்துவதில் முக்கியப்பங்காற்றியிருக்கிறது என நினைக்கிறேன்

Secondary infertility, என்பது
ஒரு குழந்தை பிறந்தபின் தம்பதிகள் விருப்பப்பட்டும் அடுத்த பிள்ளைப்பேறு இல்லாமல் போகும் நிலையை குறிப்பிடுகிறார்கள்
இந்தியப் பெண்களிடையே ஐந்தில் ஒரு மரணம் ரத்தசோகையால் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது .இதில் பெரும்பாலான பெண்கள் பழங்குடி சமூகத்தவராகவே.இருக்கிறார்கள் என்பது மறைக்கப்பட்டிருக்கிற உண்மைகளில் ஒன்று

குருதிசோகை என்பது ரத்தத்தில் சிவப்பனுக்கள் குறைந்து போவதை குறிக்கிறது

ரத்தசிவப்பனுக்கள் நாம் உண்ணும் உணவின் சத்துகளையும் ஆக்ஜிஜனையும் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துப்போகும்

ரத்தசிவப்பனுக்கள் குறைவதால் ஒப்பீட்டளவில்
ஆண்களுக்கு பிரச்சினைகுறைவுதான் ஆனால் பெண்களுக்கு பெரும்தலைவலியாக இது இருக்கிறது அதனால்தான்
ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பிரசவத்தின்போது ஏற்படும் வலிப்பு உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்க கருத்தரிப்பை எப்படியாவது தள்ளிப்போட்டுவிடுகிறார்கள் அல்லது கருத்தரித்தரித்தவுடன் பயந்துபோய் யாருக்கும் சொல்லாமல் உள்ளூர்முறைகளைப்பயன்படுத்தி கற்பத்தை கலைத்துவிடுகிறார்கள்

நாகரீகம் என்ற பெயரில் பல ஆண்டுகள் இடைவெளிவிடுதல் அதற்காக பச்சை மருந்துகளை உட்கொள்ளுதல், தொடர்சியாக, கற்பமான பின்பு கலைத்துவிடுதல் ஆகிய போக்குகள்
மலைகளில் பரவலாகத்தொடங்கியிருக்கிறது

இது பழங்குடிகளுக்குள் இருக்கும் செகண்டரி இன்பெர்ட்டிலிட்டிக்கான காரணங்களாக கருதுகிறேன்

ரத்தசோகை ஒன்றும் தீர்க்கமுடியாத பிரச்சினை அல்ல .இரும்புச்சத்து அதிகமாக உள்ள பொருட்களை உணவில் சேர்த்திக்கொள்வதன்மூலம், இதை சரிசெய்யமுடியும்.

ஆனால் இரும்பு சத்து அதிகமாக உள்ள இறைச்சி இப்போது அவ்வளவு எளிதாக பழங்குடிகளுக்கு கிடைத்துவிடுவதில்லை அதுவும் வேட்டைதடுப்புச்சட்டம் வந்தபிறகு அரிதாகி கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டிருக்கிறது
கீரைகள் சேர்த்திக்கொள்ளுதல் கொஞ்சம்கொஞ்சமாக காணாமல்போகத்தொடங்கியிருக்கிறது
பால் அருந்தும் பழக்கமோ முட்டை உண்னும் பழக்கமோ அவ்வளவு தீவிரமாக பழங்குடிகளிடம் இல்லை. பால் அருந்தும் பழக்கம் மீறிபோனால் 2 சதவீததைதாண்டாது என நினைக்கிறேன்

கோடிக்கணக்கான பணத்தை காண்பிரன்ஸ் என்ற பெயரில் தின்று தீர்க்கும் பல்கலைகழகங்களுக்கு இதுகுறித்த அக்கறையோ அல்லது ஆய்வுகளுக்கான முனைப்புகளோ கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை இவர்கள் நாசமாக போகட்டும் என்று இந்த இடத்தில் சபித்துக்கொள்கிறேன்

ஒரு வாய்ப்பாக நமது மாநிலத்தின் ஹெல்த்சிஸ்ட்டம் ஓரளவு பலமானதாக மாற்றப்பட்டிருக்கிறது கிராமபுற செவிலியர்களின் நடவடிக்கைகள், திட்டமிட்ட தொடர் கண்காணிப்பு மெக்கானிசங்கள் அடிமட்ட அளவில் அர்பணிப்புள்ள பணிமுறைகள், இவையெல்லாம் சேர்ந்து பழங்குடி பெண்களை ஓரளவுக்கு காப்பாற்றிவருகிறது ஆனாலும் தேவையான துணைசுகாதார் நிலையங்களோ ஆரம்ப சுகாதார நிலையங்களோ இல்லை.இங்கே இன்னும் பற்றாக்குறை நிலவுவதை புள்ளிவிவரங்கள் சொல்கிறது

.அப்புறம் மலைகளில் மக்கள்தொகை அடிப்படையில் சுகாதார நிலையம் அமைப்பது என்று வைக்கப்பட்டிருக்கும் முன்நிபந்தனைகள வஞ்சகமானது அவை தளர்த்தப்படவேண்டும்

இந்த இக்கட்டுகளில் இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும் என்று ஏற்கனவே கூறியதற்கு போதியகாரணமும் நியாயங்களும் இருக்கிறது

ஆதிவாசிகள் பகுதிகளுக்கு வந்த புதிதில் பச்சைகுழந்தைக்காரிகளும் கூடவே குழந்தைகளும் அடிக்கடி இறந்துபோகிற சம்பவங்களை பார்க்க நேரிட்டது. இது எங்களுக்கு பலத்த  சந்தேகத்தை ஏற்படுத்தவே  அதற்கான காரணங்களை மூத்த கலைஞர்கள் அலச ஆரம்பித்தார்கள்

பெரும்பாலானவர்கள் அப்போதெல்லாம் ஒடி அடிச்சிருக்கு தம்பி என்று ஒத்தைவார்த்தையில் ஒதுங்கிக்கொள்வார்கள். இந்த இறப்புகளுக்கு காரணமாக வெங்கச்சாங்கல் இருப்பதை வீதிநாடக குழுவிலிருந்த சில நண்பர்கள்தான் கண்டுபிடித்தார்கள்.

 ஒரு நுணுக்கமான கண்டுபிடிப்பு இது

நாம் தொப்புள்கொடியை பிரிக்க, பிளேடுகளை உபயோகப்படுத்துகிறோம்
ஆனால் அப்போதெல்லாம் பழங்குடிகள் கூர்மையான வெங்கச்சாங்கல் மூலம் தொப்புள்கொடியை வெட்டிப் பிரித்து, வெட்டிய இடத்தில் ராகிப்பத்துபோட்டு தொப்பிளில்,நெஞ்சில், கண்ணில் விளக்கெண்ணை வைத்துபடுக்கவைத்துவிடுவார்கள்.

கொஞ்சநாளில் அது செப்டிக் ஆகி சீழ்கட்டிவிடும் பிறகு செப்புலான் செடியின் வேரை அரைத்து புண்ணில் பிழிந்துவிட்டு மல்லன்மேல் பாரத்தை போட்டுவிட்டு போய்விடுவார்கள்.

 நிறையப்பேரை அது மரணத்தைநோக்கி தள்ளிவிட்டிருந்தது. அதைத் தடுக்கவும் மேலும் இது நிகழாமலிருக்கவும் பதட்டம் இருந்தது
வெங்கச்சாங்கல் சம்பவங்களை ஒரு வீதி நாடகமாக ஆக்கி, எல்லா பதிகளிலும் நிகழ்த்தினோம் அதன்பின் கொஞ்சம்கொஞ்சமாய் அது புழக்கத்திலிருந்து காணாமல்போனது

இப்படியான அறிவியல்தியான அலசல்போக்குகள் பழங்குடிகள் இயக்கத்துக்குள் இப்போதும் தலையெடுக்கவேண்டும் ,வெறும் உரிமைசார்ந்த இயக்கம் நிச்சய்மாக ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிடும் என்பது என் எண்ணம் மேலும் ஒரு உடல்நலம் என்பதும் ஒரு உரிமையாகப்பார்க்கப்படுகிற போக்குவளரவேண்டும் அதை களத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பயிற்சியாகவே பயிற்றுவித்தால்கூட தவறில்லையென்று தோன்றுகிறது

இன்றும் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளில்தான் நிகழ்கிறது வலியெடுக்கும்வரை காத்திருக்கிறார்கள் நள்ளிரவில் வலியெடுக்கிறது ஆனால் அந்த நட்டநடுநிசி நேரத்தில் வாகனங்கள் அடர்பகுதிகளுக்குபோவதும் வருவதும் அரிதாக இருக்கிறது அதனால் உள்ளூர் முறைகளை பயன்படுத்துவதிலிருந்தும் வீட்டிலேயே பிரசவம்பார்க்கும் முறைகளிலிருந்தும் முற்றிலும்விடுபடமுடியவில்லை

வழியில் ஓய்வுபெற்ற நர்ஸ் ஒருவரிடம் பேசினேன்

''வீட்டிலேயேபிரசவம் நடக்கும்போது சூச்சர் அதிகமாகிறது. ஹெர்மேஜ் இருக்கும். பர்வெஜினா.முறையில் கட்டிகளை அகற்றவேண்டும் இல்லையேல் மரணமும்.நாள்கழித்து பாதிப்பும்.இருக்கும். நாங்க எப்படியாவது காலையில் வண்டியைபிடித்து அங்க போயிருவோம் அல்லது வண்டியப்பிடித்து இங்க கூட்டியாந்திருவோம் என்றார்
மீண்டும் கர்ப்ப்பை பழைய நிலைய அடையும் 42 நாட்களும் சிரம்தாழ்த்தி வணக்கம்வைக்குமளவுக்கு அற்புதமான தொடர்நடவடிக்கையை செய்கிறார்கள்
இவ்வளவு அர்பணிப்புள்ளதாக விளங்கும் அந்தத்துறையில் குறைகளே இல்லையென்றுசொல்லிவிடமுடியாது

கள அளவிளான பணியாளர்களிடம் மேலிருந்து, ’’இன்பெர்டிலிட்டி கேஸ்களை கணக்கில்கொண்டுவரவேண்டாம்’’ என்ற வாய்மொழி உத்தரவு இருப்பதாக சொல்கிறார்
ஆரம்பசுகாதாரநிலையங்களில் மருத்துவர்கள் இருக்கும் நேரம் குறைவதாகவும் அவர்கள் வெவ்வேறு வேலைகளில் மூழ்கிப்போவதாகவும் குற்ற்ம்சாட்டினார் அந்த குற்றச்சட்டில் உண்மையில்லாமலில்லை என்பதை நிறைய தருணங்கள் நிரூபணம் செய்திருக்கிறது

பிரச்சினை இருக்கில்ல அங்க ஏன் போகவேண்டும் பழங்குடிகளிடம் பீடியாட்ரிக்ஸ்கள் , கைனக்காஜிஸ்ட்டுகள் ,செக்ஸாலிஸ்டுகள் எல்லாம் இல்லையா என்று சிலர் கேட்கிறார்கள்

இருக்கிறார்கள்..

ஆலமரத்தின் பழத்தை தண்ணீர்விட்டான்கிழங்கையும் பால்சுரக்க பரிந்துரைக்கிரார்கள் அதன்பழத்தை காயவைத்து உண்டால் விந்தணுக்கள் அதிகரிக்கும் வீரியமாகும் என்று சொல்கிறார்கள்
கற்பமானபின்பு சிறுநீரகத்தொற்று வராமலிருக்க கத்தாளையிலிருந்து சாறெடுத்து ஒரு டானிக்காக சாப்பிடுகிறார்கள்
கருவின் வளர்ச்சிக்கு அசோகமரத்தின் பூவை கசக்கி சாறாக வடித்து உபயோகப்படுத்துகிறார்கள்
மென்சூரல் பிரச்சினைகளை தீர்பதற்காக கருந்துளசியையும் செம்பருத்தியின் வேரையும் பூவையும் ஒன்றாக பொடித்து அரைத்து ஒரு பசைபோல செய்து சாப்பிடுகிறார்கள்
.பாலியல் தொடர்சிக்காக அஸ்வகந்தா கிழங்கை பயன்படுத்துகிறார்கள்
கடந்தகாலங்களின் அவர்களின் மருத்துவ ஞானத்தைவைத்து, அனுபவ ஞானத்தை வைத்து இவற்றையெல்லாம் உபயோகப்படுத்தினார்கள். இப்போதும் அதே வீரியம் அந்ததாவரங்களில் இருக்கிறதா அல்லது பழைய நிலையில்தான் இவர்கள் உடல் இருக்கிறதா என்றுபார்த்தால் தோல்வியே மிஞ்சும் என நினைக்கிறேன்

Comments

  1. sir just came across by accident I also belong to coimbatore I wish to know about the work you are doing and I wish to involve myself too you belong to any organisation you can please mail me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக