Skip to main content

என் டி ராஜ்குமார் ஒரு ஜன வசிய மருத்துவன்



ஈணம் என்னும்  கவிதை நிகழ்த்தும்   முறைக்கு நாம் கொஞ்சமும்  பழக்கப்படவில்லை ஆனால் கேரளத்தில் அது மிக பரிச்சயமான ஒரு முறை.  கவிதையை கிட்டத்தட்ட ஓதுதல் நிலைக்கு தள்ளி ஒவ்வொரு நிலைக்கும் இடைவெளி கொடுத்து  மீண்டும் ஓதி. ஒரு மெளனத்தில் நிறுத்தி  நம்மை வனாந்திரத்துக்குள் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.   இப்படி மெளனம் முடியும் இடத்தில்தான் அந்தக்கவிதையை  கவிஞன் கைவிட்டுவிடுகிறான். அல்லது நமக்கு கைமாற்றிவிட்டு உறைந்துபோய்விடுகிறான்..அதற்குப்பிறகு  அது நமது  சொற்க்களன்ற  அடியாளத்தில் இறங்கி சவ்வூடுபரவலை நிகழ்த்துகிறது.

ஈணம் குறித்து ஸ்ரீ யிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது பல நகைச்சுவையான விசயங்களை பகிர்ந்துகொண்டார். சீரியசாக அவர் பகிர்ந்துகொண்டது  பேராசிரியர் மதுசூதன நாயரின்  நாராணத்து பிராந்தன் என்னும் புகழ்பெற்ற ஈணம்.   


யார் இந்த நாராணத்துப்பிராந்தன்?

விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சர்  வரருசி  ஒரு பிராமணன் 'விதிப்பயனாக’ அவன்  ஒரு பறைப்பென்ணை மணக்க நேர்கிறது.

அது பறைப்பெண் எனத்தெரிந்ததும் தன்னைதானே சாதிவிலக்கம் செய்துகொண்டு  ஊரை காலிசெய்துவிட்டு காடுகளிலும் மலைகளிலும் அந்தப்பெண்ணோடு அலைகிறான்.  அப்படி அவன் அலையும் காலத்தில் வருடத்துக்கு ஒன்றாக பதினோறு குழந்தைகளை பெறுகிறார்கள் அப்படிப்பெற்ற குழந்தைகளில்  நாரணத்து பிராந்தன் எட்டவது குழந்தை  

பிராந்தன் பிறக்கும்போதே படுசுட்டி வளர்ந்த பிறகு  வானவியல் வல்லுநர் ..  அடிக்கடி  அந்த வல்லுநரை  சுடுகாட்டில் பார்க்கலாம். பிணம் எரித்த சாம்பலை எடுத்து பூசிக்கொண்டு  இடுகாடு வரைக்கும் புரண்டுகொண்டிருப்பான் எலும்புகளை  தலையில் வைத்துக்கொண்டு ருத்திரக்கூத்தாடிக்கொண்டிருப்பான். .ஆற்றங்கரைகளில் மல்லாக்க படுத்துகொண்டு நட்சத்திரங்களோடு உரையாடி நிலாவை தண்ணீருக்குள் அமிழ்த்தி மூச்சு திணறவைப்பான்   இப்படி இருந்தால் வழக்கமாக எல்லோருக்கும் கிடைக்கும் ’பிராந்தன்’ பட்டம்  அவனுக்கும் கிடைத்தது. பாலக்காட்டுக்கு அருகில் ஒரு சிற்றூரில் நம்பூதிரியின் நாராயணமங்கலம் என்னும் மனையில்  வளர்ந்ததால் .அவன் நாராணத்து பிராந்தன் என்று அழைக்கப்பட்டான் .

நாராணத்து பிராந்தனின் அன்றாட வேலைகளில் மிக முக்கியமான ஒன்று, ராயர் நல்லூர் என்னும் மலைக்கு கீழிருக்கும் பாறை ஒன்றை  உருட்டி உருட்டி... மலை உச்சிக்கு கொண்டு போவதும்... கொஞ்ச நேரம் கழித்து அதை அப்படியே மலையில் இருந்து உருட்டிவிடுவதும்தான். இதில் என்ன ஆச்சரியம்  என்றால் அவன் அந்தப்பாறையை கைகளால் தொடமாட்டான்  கைகளை தள்ளுவது போல் காட்டினாலே பாறை மேலே நகர ஆரம்பித்துவிடும். ( கிட்டத்தட்ட   கிரேக்க சிசிபஸ்  ) 

இப்போது கேரளத்தில் நாரணத்து பிராந்தன் தெய்வம்...  

இப்படி... எல்லா ஈனங்களும் கிட்டத்தட்ட ஒரு கதையை போலவே தொடங்கி கவிதையாய் முடிகிறது அல்லது கதையபோல தொடங்கி கவிதையாகிவிடுகிறது. அதற்குள் அது அவ்வபோது எதைவேண்டுமானாலும் இழுத்துக்கொள்ளும்


ஈணம்  தமிழில் இருக்கா? என்று கேட்டால்  இல்லை.....  ஆனா இருக்கு என்றுதான் சொல்லமுடியும். நமது அனுபல்லவிகளும் தொகையறாக்களும் அந்தவகையை சார்ந்தவைதான். என் டி ராஜ்குமாரை அறிந்தவர்களுக்கு சட்டென நினைவுக்கு வந்துவிடும். அவர் கவிதையை சொல்பவரில்லை.. நிகழ்த்துபவர். தமிழின் மிக முக்கியமான  கலை ஆளுமை. ஒடக்கு, ரத்த சந்தணப் பாவை, காட்டாளன், கல் விளக்குகள் போன்ற தொகுப்புகளை தமிழுக்கு தந்தவர்.  தலைசிறந்த பாடகர்; நாடகக்கலைஞர்; அவர் பெருங்குரலில் பாடத்தொடங்கி ஒரு மந்திரகயிற்றால்  நம்மை கட்டிப்போடும் ஆற்றல் கொண்டவர்.  

என் டி ஆரின்  ஈணங்கள் குறுந்தகட்டின்  வெளியீட்டுவிழா சென்ற ஞாயிறு கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்றது. மாண்டேஜ் ஸ்டுடியோவும் முகம் பதிப்பகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. 

அரங்கம் நிறையவில்லை அது தேவையானதும் இல்லை.

ஒரு வழியாக நிகழ்வு தொடங்கிவிட்டது    

மந்திரித்த சொற்களை எறிவதற்கான ஆயத்தங்களோடு  என் டி ஆர் எழுந்தார்.  

ஒரு பிரளயத்ததுக்கு முந்தைய  நிசப்தம்  அங்கே நிறைந்திருந்தது  ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமிக்குள் புதைத்து கிடந்த ஒரு தொல்குடி  அரங்கின் மையத்தை பிளந்துகொண்டு எழுந்து நின்றது. தெற்கு மூலையிலிருந்து ஒரு  தொண்டகப்பறையின் முழக்கம் வீதிகளைக் கடைந்து ஆற்றைக்கடைந்து வலிகளை கடைந்து திரட்டிவந்த இசைத்துணுக்குகளை அரங்கத்தில் அள்ளிதெளித்தது.  

அது யாருடைய கண்ணீரையும் கேட்கவில்லை. யாருடைய  இரங்கலையும் கேட்கவில்லை நாம் தப்பிக்க நினைக்கும் ஒவ்வொரு கணத்தையும் வழித்தடங்களையும்   எப்படியோ அறிந்து கொண்டு கூட்டை பிரித்து உள்ளிறங்கியது  கன நேரத்தில் சிறிய மனத்துணுக்கைமட்டும் கொத்திக்கொண்டுபோய் உச்சிக்கிளையில்…. யார் வேண்டுமானாலும் முட்டைகளை இடுவதற்கும் குஞ்சுகளை வளர்பதற்குமான சுதந்திரத்தோடு கூடிய புதிய கூடொன்றைக் கட்டத்தொடங்கியது.

சுழல்காற்று மெல்ல வலுக்கத்தொடங்கியது. நாயுருவி விதைகளாலும் வெட்டுக்கிளிகளின் எச்சங்களாலும் நிரம்பியிருந்த இரண்டு கலயங்களோடு வந்த ஒரு ஜன வசிய மருத்துவன். தனது குறிப்புகளை ஏவத்தொடங்கினான்


ஓடுகளுக்குள் ஒளிந்திருந்தவர்கள்................. 

சிறுகடியெறும்பாகி  யானையின் காது தேடி பிளிரிநின்றார்கள்

அதிகாலையில் துவைக்கபடும் அழுக்குத்துணிக்கு ஆற்றில் ஒரு கல்லானார்கள்

மகனின் புணர்தலுக்கு இடமளிக்க விசம் கேட்டு, தனது சோற்றில் கலந்து பிண்டாமானார்கள்

வர்மத்தின் முடிச்சு தேடி சிலரது ...கால் பெரு விரல்கள் வீதிக்கு போயிருந்தது
  
தன் நிறம் பறிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஓரு பொயட்டிக்கல் அனிமல் மட்டும் மீண்டும்  பொலிட்டிகல் அனிமலானது

குறிப்பு

கிரேக்க வீரனான சிசிபஸ் மன்னிக்கமுடியாத தவறு செய்தான் என்று  குற்றம் சாட்டிய கடவுள்  ஒரு சாபமிடுகிறது  அந்த சாபம் கிட்டத்தட்ட  நமது பிராந்தன் செயலை ஒத்ததாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பிராந்தன் விருப்பப்பட்டு செய்ததை சிசிபஸ் கட்டாயத்தின் பேரில் செய்கிறான்.  .     இதோ அந்த சாபம் ..... சிசிபஸ்  தினமும் ஒரு  பெரிய உருண்டைக்கல்லை  பக்கத்தில் இருக்கும்  மலைஉச்சிக்கு உருட்டிக் கொண்டே போக வேண்டும் .உச்சிக்கு போனவுடன்    அந்த கல்லை அம்போவென விட்டுவிடவேண்டும்  .அது உருண்டு உருண்டு  கீழே வந்து சேர்ந்தவுடன்   மறுபடியும் அக்கல்லை உச்சிக்கு உருட்டி போக வேண்டும் ..உச்சியிலிருந்து மீண்டும் பாறை கிழே உருண்டு வரும் .இப்படியே அவன் தினமும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. சிசிபஸுக்கும் பிராந்தனுக்குமான  ஒப்புமை ஆராயப்படவேண்டிய ஒன்று.  மேலும் பிராந்தனை அன்றைய அரசியல் சமூகப்பின்னனியில் வைத்து இனங்காணவேண்டியதும் அவசியமாகிறது. 




                     
                                     கூட்டு வெளியீடு 
                  முகம் பதிப்பகம் & மாண்டேஜ் ஸ்டுடியோ
                               கோவை
                                                                       9159033939

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக