Skip to main content

இந்திரனின் கடல் நமக்கு மிக அருகில்

தன் உடலில் 80 சதவீதம் கடலை சேமித்து வைத்திருக்கிற ஒருவனுக்கு   வரைபடங்களும், திசைகாட்டும் கருவிகளும் தேவையானதாக இருக்காது. தனது மூதாதையர்களைச் சுமந்துபோன   பாய்மரக்கப்பல்களின் நீர்ச்சுவடுகள் சமுத்திரத்தின் மேல்   அவனுக்காக உறைந்து  அழியாமல் இருக்கக்கூடும்..
.
நெடுங்கரை இருந்து  வெண்தோடு இரிந்த குறுங்கால் அன்னம்  அலகுகளில் சுவடிகளோடு அவனுக்காக திரும்பக்கூடும்..

இந்திரனின் நனவிலி   கடலாலும்  மலையாலும் பயணங்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் சொல்வதுபோல் அதில் நகரங்களின் குரலென்பதை  என்னால் மருந்துக்கும் பார்க்கமுடியவில்லை.. 

அதனால்தான் அவருக்கு   ''ஏமுறு பெருமீன்  பொருத’’ எறிஉளி வேண்டியிருக்கவில்லை                                                   
                                                    ****

அதோ கொலம்பஸின் வர்ணமிழந்த மேசை........ அந்த மேசையின் வலது புறத்தில்  நெப்போலியனின்  நாட்குறிப்பு கிடக்கிறது. .இந்த  77 ஆம் பக்கமும் 83 ஆம் பக்கமும் அதிலிருந்துதான் கிழிக்கப்பட்டிருக்கிறது..  அதன் புழுதிகளில் பதிந்த கைரேகைகளை யாராவது சோதிக்கக்கூடும்... அப்படி  சோதிக்க நேர்ந்தால் யாருடைய கைரேகையும் அதில் இருக்கக்கூடும்நம்முடைய கைரேகையும்.....

மணலுக்கு பதிலாய் செவ்விந்திய  பெண்களின் கருமுட்டைகள் நிரம்பிய கடிகாரத்தின் மெல்லிய ஓசை....... அந்த மேசைக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் மணல்கடிகாரத்தில் இருந்துதான் வந்துகொண்டிருக்கிற்து .

உடைந்த பீப்பாயின் சாளரத்தின் வழியே அட்லாண்டி கடல் விரிந்து நிறக்கிறது.கறுப்பு அடிமைகள் தங்கள் குருதியில் விளைவித்த கரும்பையும் வீச்சமடிக்கும் புகையிலையும்..... , அடிமைத்தனத்தை விடவும் சாவை நேசித்த அவர்களின் வலி நிறைந்த கதைகளையும் கரீபியன் அலைகளுக்கு சொல்லத்தொடங்குகிறது..                                                                                                                                                    

வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்த கடற்காகம் என்னிடம் இரண்டு கேள்விகளை எழுப்பியது 

கொலம்பஸுக்கு  முன்பு கொதுலுப்  இருந்ததா ? 

இருந்தது....

ஹைடி இருந்ததா?

இருந்தது....

ஆனால் பாறைகளின் இளஞ்சூட்டில் தலைவைத்து உறங்கும்,நீர்நாய்களோடும் வெயிலை சுவாசித்து மின்னலை பிரிக்கும் நீலத்திமிங்கிலங்களோடும் கரைகளில் ஊரும் நண்டுகளைச்சீண்டும்  மீன்களோடும் பாக்சைட் என்றால் என்னவென்று கேட்கும்  நெடும் மலைத்தொடர்களோடும் இன்னும் அள்ளாத வளங்களோடும் அரவாக் பூர்வகுடிகளோடும் அந்த பட்டாம்பூச்சித்தீவு கூட்டுப்புழுவாக இருந்தது 

பதிலை இறுத்துவிட்டு மீண்டும் பழைய கேள்விகளையே என்னிடம் கேட்டது                                                                                                                                                                    

இப்போது கொதுலூப் இருக்கிறதா?

இல்லை....

ஹைடி?

இல்லை....

இரண்டாம்  பதிலுக்கு முன்பே அது தன் சிற்குகளை அடித்து பறக்கத்தயாராகிவிட்டது

அதன் திசை இந்தியக்கடலை நோக்கியதாக இருந்தது
                                                          @@@

கடலில் வீசப்பட்ட அடிமைகளின் புலாலை உண்டு  உண்டு படிமமாக மாறிவிட்ட ஒரு சங்கு,  அந்த அதிகாலை வேளையில்  கவிஞனின் அறைக்கதவை தட்டுகிறது. கரையோரம் எழுந்து நிற்கும் ஒரு  மரத்திலிருந்து துயரக்காற்று.  அதன் துவாரங்களில் நுழைகிறது. ஓயாமல் விசும்பத்தொடங்குகிறது சங்கு. . அவன் அதை அறுத்து அணிகலனாகவோ அழகுப்பொருளாகவோ  மாற்றிக்கொள்ள முடியும்  அல்லது போத்தல் மதுவோடு உணவறைக்கு கொண்டுபோகமுடியும்..  மானுடத்தை அதன் சுதந்திரத்தோடும் காத்திரத்தோடும் நேசிக்கும் கவிஞனுக்கு மூன்றவதாக ஒரு தேர்வும் இருக்கிறது. அவன் அதை எடுத்துக்கொள்ளாவிட்டால் யார் எடுத்துக்கொள்ளமுடியும்.

அவனுக்குள் இருக்கும் உப்பு  விழிக்கிறது. அவன் கொற்றவையாகி நடனத்தை தொடங்குகிறான். மீன்கோட்பறை காற்றில் கரைந்து  துர் தேவதைகளை தீவுக்கு வெளியே துரத்தியடிக்கிறது 

பறவையாகி வலசை போகிறான்.  அவன் சிறகுகள் இன்னொரு கண்டத்தின் ஈரத்தை சுமந்து வருகிறது.

 மர நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கட்டுமரத்தில் அமர்கிறான்.துவாரம் அடைந்து  அது  அவனை ஆழ்கடலுக்கும் அப்பால்கொண்டு சேர்க்கிறது. 

கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியும் நீர்ப்பரப்புக்கு அருகில்.......   யாருமற்ற அந்த பெருமணல்பரப்பு, யாரை வேண்டுமாணாலும் என்னவேண்டுமானாலும் செய்துவிடக்கூடும். நம்மையும் செய்கிறது.

அலை மடிக்கும் பாறைகளின் மேலுள்ள இளஞ்சூடு நமக்குள்ளும் பரவுகிறது 

டெல்கிரீசின் கட்டுமரம் புதுச்சேரிக்கு திரும்பிவிடுகிறது. 
 .
ஆம் இந்திரனின் நனவிலி   கடலாலும்  மலையாலும் பயணத்தாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் சொல்வதுபோல் அதில் நகரங்களின் குரலென்பதை  என்னால் மருந்துக்கும் பார்க்கமுடியவில்லை.. 

அதனால்தான் அவருக்கு   ''ஏமுறு பெருமீன்  பொருத’’ எறிஉளி வேண்டியிருக்கவில்லை......                                                                                                              
 குறிப்பு                                   

கொதுலுப்  கரிபியன் கடலில் அமைந்திருக்கிற      இரட்டைத்தீவு. . தோற்றத்தில் பட்டாம்பூச்சி சிறகை விரித்திருப்பதுபோல் காணப்படும் இத்தீவை பட்டாம்பூச்சி தீவென்றும் அழைக்கிறார்கள்  ஏற்கனவே அங்கு அராவாக் என்னும் பழங்குடிகள் வாழ்ந்துவந்தனர்

மற்ற கரீபியன் தீவுகளுக்கு என்ன நேர்ந்ததோ அதில் இம்மியும் பிசகாமல் இங்கும் நடந்ததற்க்கு  சாட்சிகள் இன்றும் இருக்கிறது

பல்வேறு பயன்பாட்டு ஆசையில்  காலடி  வைக்க முயன்ற ஸ்பானியர்களை முதலில் அங்கிருந்த அரவாக்கள் மூர்க்கமாக எதிர்த்து நின்றனர். இன்னதென்று அறியாத  புதுவகையான தாக்குதலில் நிலைகுலைந்த ஸ்பானியர்கள்  அங்கிருந்து பின்வாங்கி சென்றனர்.
முதன்முதலாக 1493 ல்  இந்த தீவுகளில்   கொலம்பஸ் காலடிவைத்தான்

அவன்  இங்கு வந்து சேர்ந்தது ஒரு விபத்துதான் உண்மையில் அவன் ஆசிய பிரதேசங்களைத்தான் தெநெடிக்கொண்டிருந்தான் . முதன் முறையாக அவன் காலடி வைத்தபோது அரவாக்குகள் மிகுந்த மரியாதையோடும்  வழக்கமாக மற்ற மனிதர்கள் மீது காட்டும் பேரன்போடும் வரவேற்று தங்கக்கட்டிகளையும் தங்க சங்கிலிகளையும்  பரிசளித்தனர்

பின்னாளில்அதுதான் அவர்களுக்கு பெரும் வினையாக வந்து சேர்ந்தது ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் அங்குள்ள பிரபுக்களுக்கு   வேண்டியளவு தங்கம் தருவதாக உறுதியளித்தான். அந்த உறுதியோடு மீண்டும் தீவுக்கு வந்த அவன்  தங்கம் வேண்டி அந்த தீவின்  பூர்வகுடிகளை  படுத்திய   கொடுமைகளும் அத்ற்காக அவன்  தீட்டிய திட்டங்களும்  கையாண்ட முறைகளும்  கர்ணகொடூரமானவை.அதுவரை எந்த ஆட்சியாளனும் கடைபிடிக்காதது

முதலில் 14  வயதுக்கு மேற்பட்ட அரவாக்குகள் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கு ஒருமுறை குறிப்பிட்ட அளவு தங்கத்தை தனக்கு செலுத்தவேண்டும் என கட்டளையிட்டான்  உண்மையில் அங்கே அவ்வளவு தங்கமெல்லாம்  கிடையாது ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படிந்து தங்கம் கொண்டுவராத அரவாக்குகளை  தேடித்தேடி கைகளை வெட்டி  தீவை ரத்தவெள்ளத்தில்  மூழ்கடித்தான்

இத்ற்குப்பிறகு அரவாக்குகள கொதித்து எழுந்த பல்வேறு கிளர்சிகள் மூலமாக கொலம்பஸை திணறடித்தனர் ஆனால் நவீன ஆயுதங்களோடு இருக்கும் அவர்களை எளிதில் வெற்றி கொள்ளமுடியவில்லை  . நிறைய அரவாக்குகள் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களை உயிரோடு எரித்தும் பொதுவில் தூக்கிலிட்டும் கொன்றனர் எஞ்சியவர்களை கைது செய்து அடிமைகளாக்கி தோட்டங்களிலும் சுரங்கங்களைலும்  வேலைசெய்யவைத்தனர்  . இதில் பெருமபகுதி அரவாக்குகள் கொடூரமான கருணையற்ற இந்த வேலைகளின்போதே இறந்துபோயினர்  நிறைய அரவாக்குகள் த்ற்கொலைசெய்துகொண்டனர். தங்கள் குழந்தைகள் படும் துயரம் காணச்சகிக்காமல் அவர்களை கொன்றுவிட்டு அரவாக் தாய்மார்கள் தாங்களும் த்ற்கொலை செய்துகொண்டனர் தப்பியோடியவர்கள் ஏவிவிடப்பட்ட நாய்களால் துக்கு துக்காக கிழிக்கப்பட்டனர் அல்லது  சுட்டு வீழ்த்தப்பட்டனர்


பொழுதுபோகாமல் கொலைசெய்யப்பட்ட அரவாக்குகள் எண்ணீக்கையே பல்லாயிரத்தை தாண்டும் உதாரணத்துக்கு  தங்களது கத்திகள் கூர்மையானவையா என்று சோதிப்பதற்க்கு படையாட்கள்   அரவாக்குகளை துண்டு துண்டாக வெட்டி விசிய வரலாறெல்லாம் அங்கு உண்டு

கிளிகளோடு விளையாடிக்கொண்டு  வந்த அரவாக் குழந்தைகளிடம் கிளிகளை பிடுங்கிவிட்டு அந்த பிஞ்சுகளின் தலையை ஒரு விளையாட்டுக்காக கொய்த ஸ்பானிய கொடூரங்களெல்லாம் அங்கு சர்வசாதாரணம்
குறிப்பிட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட  200,000 அரவாக்குகள் அழிக்கப்பட்டனர்  ஒட்டுமொத்தமாக  கரீபியன் தீவுகள்  பிணக்காடாக காட்சியளித்தது

காலம் ரத்தக் கவிச்சியோடு சுழன்று நின்றது

அதிக அளவு தங்கமோ வெள்ளியோ கிடைக்காத இந்த கொதுலுப்பை.... கைப்பற்றவோ அங்கு அதிகாரத்தை நி|றுவவோ முதலில் அய்ரோப்பியர்கள் பெரிய ஆர்வம் ஏதும் காட்டவில்லை.  .ஆனால்  1635ல் கொதுலூப்பை  கைப்பற்றிய பிரான்ஸ்... அடிமை முறையை நிறுவனப்படுத்தியது . உலகுக்கே சுதந்திரம் சமாதானத்தை போதித்த அது  தனது காலடியில் இருந்த கொதுலுப்பை  அடிமைமையாகவே இருக்கவேண்டுமென்றே விரும்பியது. 
                                                                                                                                                       பல்வேறு போர்களுககு பின் கொதுலூப்பையும் ஹைடியையும்  பிரிட்டனிடமிருந்து பிரான்ஸ் கைப்பற்றியது
கறுப்பின மக்களின் வீரமிகு  எழுச்சிகளுக்கு பின் 1848 ம் ஆண்டு, அடிமை முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது. .அதனால் ஏற்பட்ட  இழப்பை ஈடுகட்ட அடிமைகள் இடத்தில், ஒப்பந்த வேலையாட்கள் தேவைப்பட்டனர் அவர்களுக்கு தேவையான ஒப்பந்த அடிமைகள்  இந்தியாவின் கோரமண்டல் கடற்கரை , புதுச்சேரி, சென்னை , கல்கத்தா, மற்றும் மலபார் பகுதிகளிலிருந்து  இறக்குமதி செய்யப்பட்டனர்.                                                  

இப்போது பிரஞ்சுதான்   கொதுலுப்பின்  நிர்வாக மொழி   கல்வி  கூட பிரெஞ்சில்தான் போதிக்கப்படுகிறது ஆனால் கொதுலுப் மக்கள,பிரெஞ் கலந்த கிரியோல் மொழியை பேசுகின்றனர். சொந்த இனத்தின் அடையாளங்களை சொந்த மொழியை இழந்த  பல்வேறு மண்ணின்   மக்கள் இன்னதுதானென்று அறியாத புதிய அடையாளத்தோடு  இங்கு பெருமளவில் வசித்துவருகிறார்கள்   

Comments

  1. கொதுலுப் குறித்த என் கவிதைகளின் மிக அருமையான விமர்சனம்....அபூர்வ தகவ்ல்கள்...புகைப்படங்கள்....ஒரு கவிதை மனதுடனும் ஒரு கவிஞனின் கற்பனைத் திறத்தோடும் எழுதி இருக்கிறீர்கள்...பாராட்டுகள்.....இந்திரன்

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் கூடுதலாகவே எழுதியிருந்தேன் முழுமைப்படுத்த இய்லாமல் வேலைகள் தடுத்துக்கொண்டே இருந்தது . அதனால் இருப்பதை பதிவுக்கு கொண்டுவந்துவிட்டேன் வாய்ப்புக்கு கிடைக்கும்போது இக்கட்டுரையை மேலும் செழுமைப்படுத்துவேன் மற்றபடி மிக அருகில் கடலுக்கு இது போதாமை நிறைந்த விமர்சனம்

      Delete
  2. உண்மையில் அசந்துபோனேன். அறிவின் வழிதலைக் கண்டேன். அற்புதமான எழுத்து. பாராட்டித் தீராத பசிதரும் எழுத்துகள். மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக