Skip to main content

ஒரு கிராமத்து குயில்

இந்துஸ்தான் கல்லூரியில்ஒரு கிராமத்து குயில்ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா நடக்கிறது..நீங்கள் கட்டாயம் வரவேண்டும்’’ என்று பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் அழைத்திருந்தார்கள்.

நானும் நிகழ்வுக்கான அழைப்பு என்று . வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன் ஆனால் தோழர்கள் அழைப்பிதழில் போட்டுவிட்டு படத்தையும் அனுப்பிவிட்டார்கள்.

நல்வாய்ப்பாக அதன் ஆவணப்படத்தின் நாயகன் தோழர் பத்திரப்பன் ஏற்கனவே அறிந்தவராக இருந்தார்.

தோழர் பத்திரப்பன் ஒரு ஒயிலாட்டகலைஞர்

மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள தாசம்பாளையம் என்னும் கிராமத்தைச்சேர்ந்தவர்

இந்த சுற்றுவட்டாரங்களில் பெண்களை முதன்முதலாக ஒயிலுக்குள் கொண்டுவந்தவர்.. 

85
வயதைக்கடந்து இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிற ஆளுமை.


இந்தப்படம் இரண்டுவகையில் முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன்

1 ஒரு ஒயில் கலைஞனின் வாழ்வுகுறித்து எடுக்கப்பட்டிருக்கிற முதல் ஆவணப்படம் .
2 மேட்டுப்பாளையம் மாதிரி எந்நேரமும் மதச்சண்டைகளை தொடங்க முண்டாசு தட்டிக்கொண்டிருக்கிற இடத்திலிருந்து சிக்கந்தர்பாஷா என்ற பெயர்கொண்ட ஒரு இளைஞனால்,சமூகத்தை எல்லாவகையிலும் நேசிக்கும் ஒரு கலைஞனால் அனைத்தையும் கடந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் .

இந்த வெளியீட்டுவிழாவில் தோழமைகள் பத்திரப்பன்,சிக்கந்தர் ஆகியோரோடு மேடையை பகிர்ந்துகொள்வது  பெருமிதமான தருணம்.

முக்கால் மணிநேரம் நகரும், இந்த ‘’கிராமத்துக் குயிலின்’’ நெறியாள்கை ஒரு கட்டுப்பாட்டோடு கையாளப்பட்டிருக்கிறது

ஒரு நேர்த்தியான ஆடற்கலைஞனின் அடவுகள் முடமாகிப்போய்விடக்கூடாது என்ற உள்ளார்ந்த அக்கறையோடு, இந்தப் படத்தை ஆத்மார்த்தமாக செய்திருக்கிறார் சிக்கந்தர் .. ஒரு ஆவணப்படம் எடுக்கிறோம் என்ற உணர்வுகூட அவரைப் பொறுத்தவரையில் இரண்டாம் பட்சம்தான்.

தோழர் பத்திரப்பனின் கலையும் வாழ்வும் கம்பீரமும் அவரை வசீகரித்திருக்கிறது. அதை எப்படியாவது அவரது காலத்துக்குள் பத்திரப்படுத்திடவேண்டும் என்ற தவிப்பு அவரை இயக்கவைத்திருக்கிறது. அதை இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் நாம் பார்க்கமுடியும்.

சிக்கந்தரின் குறும்படங்களை பார்த்திருக்கிறேன் அவற்றோடு ஒப்பிடும்போது இப்போது நெறியாள்கையில் ஒரு நல்ல பக்குவம் அவருக்கு வந்திருக்கிறது.
அழுத்தமான ஆளாக மாறியிருக்கிறார் . ஈவிரக்கமில்லாமல் சில இடங்களில் வெட்டியெறிந்திருக்கிறார்.தேவைப்பட்டபோது மறுகாட்சிகளை எடுத்து இதில் சேர்த்திருக்கிறார்.தொழில்நுட்பக் கலைஞர்களை சரியாகக் கையாண்டிருக்கிறார்.

சிக்கந்தர் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் பல்வேறு மனிதர்களை ஆவணப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. நிச்சயம் அவர் தொடர்ந்து அதை செய்வார்... அதற்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும்
தோழர் வெள்ளிங்கிரி போன்றவர்கள் செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இப்படத்துக்கு தனது நேரத்தையும் நுட்பத்தையும் பயன்படுத்திய ரஞ்சித் கண்னா பிரதீப்குமார் ஆகியோரின் உழைப்பு அசாத்தியமானது

இதில் ஒளியாள்கை செய்திருக்கும்
கண்ணாவின் கேமாரா பல இடங்களில் அற்புதமான ஒரு கவிதை போல் நகர்கிறது.. குறிப்பாக அறிமுகக் காட்சியில் தோழர் பத்திரப்பன் மலைமுகட்டிலிருந்து நடந்துவரும் இடங்கள், களத்தில் நின்று அடவுகட்டும் இடங்கள், அழுத்தமாக உள்வாங்கப்பட்டு லாவகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது

உச்சிவேளை அதிகாலை இளம்மாலை என மூன்று காலங்களிலும்
தேவையான ஒளியையும் ஒலியையும் அற்புதமாக உள்ளே கொண்டுவந்திருக்கிறார்
ஆரம்பக்காட்சிகளில் அதிவேகமும் கொஞ்சம் வேகமாகப்போகவேண்டிய பிற்பகுதியில் மெதுவாகவும் கெமரா நகர்வதை பார்க்கமுடிகிறது அதை தவிர்திருக்கமுடியும்

நேர்த்தியான கேமராமேனின் இடத்தை, வெகுவிரைவாக அடைந்துவிடுவதற்கான அத்தனை குணாதிசயங்களையும் பெற்றிருக்கும் கண்னா, வேகத்தை சீர்படுத்துவதிலும் காட்சியின் கோணங்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

இங்கே சிலர் ஒயிலாட்டமும் தேவராட்டமும் ஒன்றா என்று
என்று கேட்கிறார்கள்.

ஒயிலாட்டத்துக்கும் தேவராட்டத்துக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது. இரண்டும் ஒன்றுதான் என்போரும் இருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட அது ஒருவகையில் உண்மையும்கூட அது ஒரு நீண்ட வரலாறு

பயிற்சிபெற்றும் போரில் ஈடுபடமுடியாத  ஒருசாரார்கள்  போரின் வெற்றிக்கொண்டாட்டங்களின்போது  தேவராட்டத்தை ஆடியிருக்கிரார்கள்  முக்கிய தலங்களுக்கு மன்னன் வரும்போதும் செல்லும்போதும்   அவனுடைய தேருக்கு முன்பு தேவராட்டத்தை   ஆடியிருக்கிரார்கள் வேட்டையின்போது ,வேட்டை வெற்றியின்போது அது ஆடப்பட்டிருக்கிறது, மன்னராட்சியின் பிற்பாடு  அது கிராமத்து தேவதைகளின் அருள் எழுப்ப ஆடப்பட்டிருக்கிறது,.

விஜயநகரத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்துவந்த கம்பளத்துநாயக்கர்கள், புகழ்வாய்ந்த மன்னர்களுக்கு ராஜகுருவாகவும் கட்டியங்காரனாகவும் இருந்துள்ளார்கள். அவர்களின் படையணிகளில் முன் நின்று போரை நடத்தியிருக்கிறார்கள். போர்தொடங்கவும் முடிக்கவும் நாள்களை குறித்துக்கொடுத்திருக்கிறார்கள்

அந்தப். போர்களில் வெற்றிபெற்றபோதும், அவர்களின் ஆலோசனைகள் பலித்தபோதும், தங்கள் குல தேவதைகளின் முன்பும், தங்கள் தேவர்களின் முன்பும் உறுமிகொட்ட உடல் திமிற நடனமாடி நடனமாடி தங்களது வேண்டுதல்களை நேர்ச்சைகளை கழித்திருக்கிறார்கள்

இந்த ஆட்டம் கொங்குக்கு வந்ததற்கு ஒரு வரலாறு இருக்கிறது. காடு கெடுத்து நாடக்கும் ஆசையில் வந்த மன்னர்களோடு இந்த கம்பளங்களும் இங்கே வந்திருக்கிறது

அவர்களுக்குமுன்பே  கம்பளத்தார்களில் வேட்டையிலும் நடனத்திலும் வல்லவர்களான . காடேரி குலத்தினர் மேய்ச்சல் சாதிகளோடு இங்கே
வந்து நிலைத்திருக்கவேண்டும்.

பழைய சுவடிகள், சோழன்பூர்வப்பட்டயம் ஆகியவை கம்பளத்தார் காடுகொன்று நாடாக்கும் பணியில் ஈடுபட்டதை விலாவரியாக பேசுகிறது. கம்பளத்தார்களோடு காப்பு சாதிகளான அனுப்பர் அட்டியர் போன்றவர்கள் மேய்ச்சலுக்காக எல்லைகள் கடந்து வந்திருப்பதை பேசுகிறது

இருளர்களில் மூத்தவர்கள் தங்கள் மூதாதைய்ர்கள் வழியாக அறிந்த, அந்த ராஜகம்பளத்தைப்பற்றியும் அதன் பராக்கிரமங்கள் பற்றியும் காடு திருத்தும் நுட்பம் குறித்தும், வேட்டை குறித்தும் இப்போதும் வாய்சலிக்க பேசுவார்கள்.

நம் ஊகம் சரியானால் அந்த கம்பளங்களோடு வந்த தேவராட்டம் கொங்கின் தன்மையை உள்வாங்கிக்கொண்டு முரட்டுத்தன்மையை கைவிட்டு பெயர்ந்த இடத்திற்கும் காலத்துக்கும் ஏற்றவாறு மென்மையை உள்வாங்கி ஒயிலாட்டமாக மாறியிருக்கிறது என்று சொல்லமுடியும்.

இன்றைக்கு தொழிற்முறை கலைஞர்களைத் தவிர்த்து பெரும்பாலனவர்கள், இந்த இரண்டு ஆட்டங்களையும் கலந்துகட்டி அடவுகட்டி ஆடுவது அதைத்தான் நமக்குக்காட்டுகிறது

தேவராட்டமும் ஒயிலாட்டமும் வேறு எங்கு ஆடப்படுகிறது

ஒருவர்  இறந்தபின் 16 வது நாள் நடக்கிற சடங்குகளின்போது  கம்பளத்து நாயக்கர்களால் தேவரட்டம் ஆடப்படுகிறது சில இடங்களில் திருமணத்தில் துறைமிதித்தல் சடங்கின் போது தேவராட்டம் ஆடப்படுகிறது சில இடங்களில் பூப்பு நீராட்டுவிழாவின்போது தேவராட்டம்     ஆடப்படுகிறது
தேவராட்டம்  உறுமியின் லயத்துக்கு ஏற்ப 18 அடவுகளால் பின்னப்பட்டிருக்கிறது  

ஒயிலாட்டத்தை  மலைவேடர்கள் வேட்டைக்கு போவதற்குமுன்பு படையலிட்டு  சக்கம்மாவின் முன்பு ஆடுகிரார்கள்  நல்லபடியாக வெற்றிகரமாக வேட்டை முடிந்த பின்பும்  அங்குவந்து ஆடுகிரார்கள். தற்போது வேட்டை  வேட்டைச்சடங்கின்போது  ஒயிலாட்டத்தை  பிடாரி அம்மனுக்கு முன்பு நிகழ்த்துகிறார்கள்

ஒயில் தவிலின் அடிக்கேற்றவாறு 13 அடவுகளால் உள்ளடக்கப்பட்டிருக்கிறது
மேலும் முன்பொருகாலத்தில் இந்த இரு ஆட்டங்களும்    போர்ப்பயிற்சிக்காகவும் வேட்டைப்பயிற்சிக்காகவும் ஆடப்பட்டிருப்பதாக சில தரவுகள் சொல்கிறது

 குத்தடவு   அடியடவு எட்டடவு   இழுவையடவு மடக்கடவு   குதியடவு புரளடவு   சறுக்கடவு  என்று சுட்டப்படுகிற அதன் அடவுகள் இவ்விரு ஆட்டங்களும் இதுபோரோடும் வேட்டையோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதற்கு சாட்சியாக நிற்கிறது 

இந்த இந்த இரு ஆட்டங்களும் சில சாதிகளின் வாழ்விலிருந்து வாழ்வியல் சடங்குகளிருந்தும்  பிரிக்கமுடியாதபடிக்கு ஒன்றிப்போயுள்ளது கொஞ்சம் மெனக்கெட்டு  இறங்கி அலசிப் பார்த்தோமென்றால்  அந்த சாதிகள்  வேட்டையில் ஈடுபடும் சாதிகளாகவோ  அல்லது போரில் ஏதாவது ஒரு வகையில் ஈடுபடும் சாதிகளாகவோ இருப்பது ஏதேச்சையானதல்ல 

இப்படி நீண்ட வரலாறும் சுவராசியமும்  கொண்ட ஆட்டங்கள் இவை ,
மன்னர்களின் வெற்றிக்காக ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டம், ஒருகட்டத்தில் கடவுள்களின் முன்னால் பக்திக்காகமட்டும் ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டம்..வேட்டையின்போது நேர்ச்சைக்காக ஆடப்பட்டுக்கொண்டிருந்த ஆட்டம்  . அந்த ஆட்டத்தை மக்களின் பிரச்சினைகளை சொல்லவும் மக்களை அணியாக்கவும் திரட்டவும் தோழர் பத்திரப்பன் போன்றவர்கள் அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்

இப்படிப்பட்ட ஒருவரை ஆவணப்படுத்துவது உன்னதமானது . தனது 85 ஆம் வயதில் ஒரு வாலிபனைபோல் இன்னும் ஓயாமல் இயங்கிவரும் அவரை ஆவணமாக்கியிருக்கும் சிக்கந்தரை இறுக அணைத்து உச்சிமோந்து அவர் தொடர்ந்து இயங்கவேண்டும் என வாழ்த்துகிறேன் .

ஆலோசனைகளாக சிலவற்றை இப்படத்துக்கு சொல்லமுடியும்

1 அய்யா பத்திரப்பனின் பேட்டியை ஒரே இடத்தில் எடுக்கப்பட்டதற்கு பதிலாக பல இடங்களில் பல்வேறு பின்ணனியில் எடுத்திருக்கமுடியும் எடுக்கப்பட்ட காட்சிகள் கைவசம் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அதையும் படத்தில் இணைக்கலாம் .

2 கூடுதலாக நாட்டுப்புறகலைகள் குறிப்பாக ஒயிலாட்டத்தில் ஆய்வாளர் ஒருவரின் பேட்டியும் அவர் வயதொத்த சக கலைஞர் ஒருவரின் பேட்டியும் இணைக்கலாம்

3 அவர் வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை மாதிரி காட்சிகள்
மூலமாகவோ அல்லது ஓவியங்கள் மூலமாகவோ செய்யலாம்

4 தற்போதுள்ள பேட்டிகளில் சிவற்றின் நேரத்தை குறைத்து எடிடிங்கை இன்னும் கூர்மையாக்கலாம்

இவற்றை செய்யும் போது இன்னும் கச்சிதமான ஒரு படத்தை நாம் காணமுடியும்
சம்பந்தப்பட்டவர்கள் தமிழகத்தின் மூலைமுடுக்கெலாம் இந்தக் ஆவணப்படத்தை கொண்டு சேர்ப்பது வேறுவகையில் இந்த சமூகத்துக்கு ஒரு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.

#ஒடியன்


Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக