வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற
பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச பாலமுருகன் சோளகர்
தொட்டிக்குப்பிறகு
நீண்டஇடைவெளியெடுத்துஎந்தவிதஆர்பாட்டமுமில்லாமல்
பெருங்காற்றை சமீபத்தில் கொண்டுவந்திருக்கிறார்
யாரும் அதிகம்
தொடாத ,போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த
பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப்
பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு
சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று
முதலிரண்டு கதைகளான ஒரு
கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை ஈழ அகதிமுகாமுக்குள் விரல்பிடித்து
அழைத்துபோய் நிறுத்தி நடுக்கமேற்றுகிறது. எழுத்துலகத்தின் வெளிச்சம்
சொற்பமாய்பட்டிருக்கும் முகாம்களின் கோர வாழ்வை அப்பட்டமாகவும்
அடிமனதின் வலியோடும் நின்று கதை சொல்லத்தொடங்கும்போதும் ஒரு புள்ளியில்
கொண்டுபோய் நிறுத்தும்போதும் வேதனையில் உறையவைத்துவிடுகிறது
வேர்மண்ணில் தற்காப்புப் பயிற்சி எடுத்த திலகன் காலச்சூழலில் நிர்கதியாக
மண்டபம் முகாமில் அகதியாக நிற்பதும் அங்கே அதிகாரிகளின் உளவியல்
கிடுக்கிகளும் இதற்கு சிங்கள இனவெறி அரசின் கைகளிலேயே
செத்துபோயிருக்கலாமே திலகா என்று, சற்று வெளியில் நின்று இதுவரை
பார்த்திருந்த வாசகனை வாய்விட்டு சொல்லவைப்பதை எப்பாடுபட்டும்
தடுக்கமுடியாது என்றே நினைக்கிறேன்
26 பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந்த இரண்டு கதைகளும் கொடுக்கும் கனமும் மன அழுத்தமும் மிகமிக அதிகமானது
கண்ணகியை ஒரு குறியீடாக்கி இறுதிப்போரின் உச்சகட்டத்தில் எழுதப்பட்டு
இத்தொகுப்போடு சேர்ந்திருக்கும் ''அவளை நீங்களும் அறிவீர்கள்''
வலியெடுக்கும் சிறுகதைகளிள் ஒன்று அதன் சொல்லாடல்களும் செவ்வியல் கலந்த
நவீனத்துவத்தன்மையும், படைப்பாற்றலுக்கு அற்புதமான சான்றாக நின்று
ஆழ்மனதோடு உரையாடுகிறது. உரையாடி உரையாடி அந்த உக்கிரத்தை மனதின்
அடியாழத்திலிருந்து மேலெழுப்பி நிற்கவைக்கிறது.
கட்டாயம் இணைத்து வாசிக்கவேண்டியவை இந்த மூன்று கதைகளும்
ஏன் சட்லெஜ் நதி அமைதியாக ஓடுகிறது ?
'ஆப்ரேசன் புளூஸ்டாரில்' பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதில் மனம்
வெதும்பிய சீக்கியர்கள் பல்லாயிரம்பேர் ராணுவத்தைவிட்டும் காவல்துறையை
விட்டும் கொத்துகொத்தாக விலகியும் தப்பியோடியும் வந்த சூழலில் விலகிய
அவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாகவோ இந்தியாவுக்கு எதிராகவோ சதிசெய்யக்கூடும்
என்ற அச்சம் இருந்தது. அந்த அச்சத்தில் ஈவிரக்கமில்லாத அரசு எந்திரம்
சந்தேகப்படும் அனைவரையும் சுட்டுக்கொன்று காணாப்பிணமாக்கி சட்லெஜ் நதியில்
தூக்கியெறிகிறது . இதைக்காணச் சகிக்காது அமர் என்னும் உரிமை ஆர்வலன்
அவற்றையெல்லாம் தேடத்தொடங்குகிறான்.பல்வேறு வழிகளில் அவற்றையெல்லாம்
தோண்டித்தோண்டி துருவியெடுத்து குவித்துக்கொண்டே இருக்கிறான் அமரையும்
அரசு காணப்பிணமாக்குகிறது.தனது மகனான அமர் கொலைசெய்யப்பட்டது அறியாமல்
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தேடத்தொடங்கி மனம் பிறழ்ந்து போன அவனது தாயின்
பாத்திரப்படைப்பு வாசித்து முடித்தபின்னும் நின்று கனலாடுகிறது
’’சொர்க்கம் இங்கே தொடங்குகிறது’’ காஷ்மீரின் இண்டு
இடுக்குகளை.காஷ்மீரிகளின் வாழ்வில் அன்றாட வாடிக்கையாகிப்போய்விட்ட
ஆள்தூக்குதலை அடையாளப்படுத்தி அதன் துயரத்தையும் பேசுகிறது
தூக்குதண்டனைக்கதியான வேலன் தான் செய்த கொலைக்கான குற்ற உணர்சியில் வெந்து
வெந்து புழுங்கும் நிலையில் தூக்குதண்டனை அறிவிக்கப்படுகிறது. தூக்கு
நாளில் ஒரு அதிர்சி நிகழ்கிறது அதற்கு இடையில் நடக்கும் கொந்தளிப்பான
நிகழ்வுகளை கூட்டுப்புழுவில் கொண்டுவந்திருக்கிறார்
இப்படியே எல்லா கதைகளையும் சொல்லிவிடுவது சரியாதானதாக இருக்காது என்பதால் இங்கே நின்றுகொள்ளலாம்
ஒவ்வொரு கதையிலும் ,பெண் வலுவானவாளாக, எதையும் எதிர்கொள்ளும்
திராணியுடைவளாக வரலாற்றுப் படிமங்களின் சாட்சியாக நின்றிருப்பதும் ஒரு
மனிதனின் பேசும் சிந்திக்கும் சுயமாய் முடிவெடுக்கும் சுதந்திரத்தைக்கூட
காணச்சகிக்காத ஆளும் கும்பலை அம்பலப்படுத்துவதும் இந்த தொகுப்பின்
அடிநாதமாக நிற்கிறது
செயல்பாட்டாளர்கள் எழுத்தாளர்களாக
இருப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் ஒரு துயரம் இருக்கிறது அது தன்னை
கனக்கச்செய்யும் நிகழ்வுகளுக்கு நிவாரணமாக ஒன்றை செய்துவிடுவதன்மூலம்
திருப்திகொண்டுவிடுவது. திருப்திகொள்ளல் எப்போதும் கொதிநிலையில் எழும்பும்
படைப்பு மனதை வடிந்துபோகச்செய்து எழுத்துபணிகளில் இடைவெளியை
ஏற்படுத்தும்
அதற்காக கைகளைகட்டிக்கொண்டிருக்கமுடியாதுதானே
ஆனாலும் எங்களது வேண்டுகோள் தொடர்ந்து எழுதுங்கள் தோழர்தான்...
பேச்சு எழுத்து எல்லாமும் பறிக்கப்பட்டு வெறுங்கையாக நிற்கும் சூழலில்,
பேசுகிற, முக்கியமான படைப்பாக வந்திருக்கும் பெருங்காற்று,
எல்லாவகையிலும் ஒடுக்கப்படும் மக்களின்பால் அக்கறைகொண்டவர்கள்
வாசிக்கவேண்டிய முன்னெடுக்கவேண்டிய தொகுப்பு
Comments
Post a Comment