சுல்தான்களின் பேச்சடங்கிவிட்டது எங்கு பார்த்தாலும் துரைகளின் நடமாட்டம். துடிய பாட்டன் ஆண்ட, அத்திக் காடுகளும் ஈட்டிமரங்களும் தேக்குமரங்களும் சூழ்ந்த, காட்டெருமைகளும், கழுதைப்புலிகளின் கத்தலும் கேட்டுக் கொண்டேயிருந்த துடியனூர், இப்போது கால்மேலாய் மாறிப் போயிருந்தது. பதிக்குப் பக்கத்தில் நிறைய புதிய ஆட்கள் வந்து ஏற்கனவே காடழித்திருந்த இடத்தில் விவசாயம் செய்யத் துவங்கியிருந்தனர். அதில் செம்பூத்தானும் ஒருவன். சாமையும், ராகியும், நல்ல விளைச்சலை அள்ளித் தருகிற இன்னொரு தோட்டமும் ஆனைகட்டிக்கு கீழே சோமையனூரில் செம்பூத்தானுக்கு இருந்தது. அதில் அவனின் முதல் மனைவி குப்பாத்தாள் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்தாள். வேலை அதிகமாக இருக்கும்போது இங்கிருந்து வெள்ளன், கொட்டன், காரமடை, இன்னும் சிலரை வண்டியில் கூட்டிப்போவான் செம்பூத்தான்..ஒருவாரம் பிழிந்தெடுத்துவிட்டு திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவான். அவர்கள் திரும்பி வரும்போது ராகியோ, கம்போ, சோளமோ ஆளுக்கு மூன்றுபடி கொடுத்துவிடுவான். இப்போது காரமடைக்கும் மு...